தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனவே, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேர்தல் பணியில் கூடுதல் பணியாளர்கள், போலீசாரை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவை.இவற்றை மாவட்ட வாரியாக கணக்கிட்டு, தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்தல் வழக்கு வராத வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கப் பட்டுள்ளது.விரைவில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போன்றோருக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில், நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.பழுதுமுதற்கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக, தனி, 'மொபைல் ஆப்' உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மொபைல் ஆப் வழியே, எந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது, எங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி தொடர்பான தகவல்களை, மொபைல் ஆப் வழியே, உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல் ஆப்பில் எந்த விதமான விபரங்களை சேர்க்கலாம் என, அனைத்து மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது.