தலைமைச் செயலகம் முற்றுகை... 700 பேர் மீது வழக்குப்பதிவு!
நேற்று (19.02.2021) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை
சேப்பாக்கத்தில் நேற்று போராட்டத்தைத் தொடர்ந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினர், திடீரென தலைமைச் செயலகம் வந்து முதல்வரைச் சந்தித்து இதுதொடர்பாக மனுகொடுக்க முயன்றனர். அங்கு முதல்வர் இல்லை என்பதால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
உடனே அங்கு வந்த பாதுகாப்பு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் களைய சொன்ன நிலையில், ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போராட்டம் நடத்திய ஊழியர்களைப் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு மேலும் அதிகப்படியான போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள் 700 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.