பிளஸ் 2 தேர்வுக்கு நாளை முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்

 சென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொதுத்தேர்வு மே, 3ல் துவங்குகிறது. இதில், பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்கலாம்.கடந்த ஆண்டு நேரடி தனி தேர்வராக, பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாதவர்கள் அனைவரும், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, நாளை முதல் மார்ச், 6 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறினால், தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில், மார்ச், 8, 9ம் தேதிகளில், கூடுதலாக, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அரசு தேர்வுத் துறை சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர், அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.