தனியார் பள்ளிகளுக்கு கட்டாய கல்வி நிதி


 சென்னை:''கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த ஆண்டுக்கான, 375 கோடி ரூபாய் உடனடியாக வழங்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்கூறினார்.


சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று பூந்த மல்லி அருகே செந்நீர்குப்பத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.இதில், திருவள்ளூரில், 76 பள்ளிகளுக்கும், சென்னையில், 41 பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் செங்கோட்டையன்கூறியதாவது:'தமிழகம், அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் வாயிலாக, 405 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.அவர்களின் கல்வி கட்டணம், விடுதி செலவை அரசே ஏற்று, அதற்காக, 16 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த ஆண்டு வழங்க வேண்டிய, 375 கோடி ரூபாய் உடனடியாக வழங்க, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.'ஸ்மார்ட் கிளாஸ்' 7,500 அரசு பள்ளிகளில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், 80 ஆயிரம் 'ஸ்மார்ட் போர்டு'கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலித்த, 14 பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.