பள்ளி திறப்பு குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

 

சென்னை: பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று கருத்து தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, அரசிடம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கருத்து கேட்பு முடிந்ததால், அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்தி, இவ்விஷயத்தில் முடிவு எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், கல்லுாரிகளை திறப்பது குறித்து, வரும், 12ம் தேதி, அரசு அறிவிக்க உள்ளது.



ஏழு மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை, வரும், 16ம் தேதி முதல் திறக்க, தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவுக்கு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.இதையடுத்து, பள்ளிகளை திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களில் உள்ள, 13 ஆயிரம் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. காலையில் துவங்கிய கூட்டம், மாலையில் முடிவடைந்தது.


கருத்து பதிவு



ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெற்றோர், பள்ளிகளுக்கு சென்று, தங்கள் கருத்துக்களை, தனித்தனி படிவத்தில் பதிவு செய்தனர், பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றால், அதற்கான காரணத்தையும் தெரிவித்தனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, மொத்தம், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களின், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பள்ளிகளுக்கு நேரில் சென்றும், வர இயலாதவர்கள், தங்கள் பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் 'வாட்ஸ் ஆப்' வழியாகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


அறிக்கை தயார்



இதையடுத்து, பள்ளிகளில் இருந்து, முதன்மை கல்வி அலுவலகங்களில் கருத்து கேட்பு படிவங்களும், அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்; அவர்களில் கருத்து கேட்புக்கு வந்த பெற்றோர் எத்தனை பேர்; பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு எவ்வளவு; வேண்டாம் என்பதற்கு, எவ்வளவு பேர் ஆதரவு என, வகுப்பு வாரியாக கருத்து கூறியவர்கள் எண்ணிக்கை இடம் பெற்றுள்ளது.அதேபோல், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருத்தும், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளின் கருத்துகளும், சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த விபரங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தொகுக்கப்பட்டு, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.


முதல்வரிடம் முடிவு



அதன்பின், அனைத்து மாவட்ட கருத்துக்களும் தொகுக்கப்பட்டு, இன்று மாலை அல்லது நாளைக்குள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழியாக, முதல்வரிடம், அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த அறிக்கையை, தலைமை செயலர், பள்ளி கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறை செயலர்கள் அடங்கிய குழு பரிசீலித்து, இறுதி முடிவை, முதல்வரிடம் தெரிவிக்கும். அதன்பின், பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் முடிவை அறிவிப்பார் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''மாவட்டங்கள், பள்ளிகள் மற்றும் வகுப்புகள் வாரியாக, பெற்றோர் தெரிவித்த கருத்துகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோரின் ஏகமனதான முடிவு, அரசிடம் தெரிவிக்கப்படும். அதன்பின், முதல்வர் முடிவை அறிவிப்பார்,'' என்றார்.


கல்லுாரி திறப்பு



இதற்கிடையில், 'கல்லுாரிகளை வரும், 16ம் தேதி திறக்கலாமா என்பது குறித்து, வரும், 12ம் தேதி முடிவு எடுக்கப்படும்' என, உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கல்லுாரி வளாகங்களில் செயல்படும், கொரோனா வார்டுகள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்த பின், இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.


60:40 சதவீதம்!



நேற்றைய கருத்து கேட்பில் பங்கேற்ற பெற்றோர்களில் , 60 சதவீதம் பேர், பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும்; 40 சதவீதம் பேர், பள்ளிகளை திறக்கக்கூடாது என்றும், கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, அரசு பள்ளிகள், கிராமப்புற பள்ளிகள், தனியார் பள்ளிகளின் பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
தென் சென்னை மாவட்ட பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னையில் மற்ற இடங்களில், உயர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தவிர, மற்றவர்கள், பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறினர்.