வரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை

 

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல், வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, வரும், 26ல் போராட்டம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 26ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு, சம்பள பிடித்தம் செய்யப்படவுள்ளது.தற்காலிக மற்றும் பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால், வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும்.தலைமைச் செயலக ஊழியர்கள், 26ம் தேதி முழுமையாக பணிக்கு வரவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும், 26ம் தேதி பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என, அனைத்து துறைகளுக்கும், தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.