எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தில் பெருந்தொற்று நிர்வாகம்

 

புதுடில்லி; இனிவரும் காலங்களில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் பெருந்தொற்று பரவல் நிர்வாகம் தொடர்பான பாடத்திட்டம், புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக, இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில், டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றி வரும் சேவை, மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில், கொரோனா பரவல் துவங்கிய காலகட்டத்தில், பாதிப்புக்கு ஆளானவர்களை கையாள்வதும், அதற்குரிய சிகிச்சை வழங்குவதும், டாக்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.


இதையடுத்து, இனிவரும் காலகட்டங்களில், எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பில், பெருந்தொற்று நிர்வாகம் குறித்து, மாணவர்களுக்கு தனி பாடப்பிரிவை உருவாக்க, இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதில், தொற்று காலத்தில் அளிக்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், அப்போது பின்பற்றப்பட வேண்டிய, சமூக மற்றும் சட்ட விதிமுறைகள் குறித்தும், விரிவான பயிற்சி அளிக்கப்படும்.


இதன் வாயிலாக, எதிர்காலத்தில் உருவாகும் டாக்டர்கள், புதிய தொற்றுகளை கண்டறிவது, அதை எதிர்கொள்வது, சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், சுகாதார ஆளுமைமிக்கவராக, இருப்பர் என, கூறப்படுகிறது.


&'மருத்துவ மாணவர்களுக்கு, சவால் நிறைந்த காலத்தை நிர்வகிக்கும் திறன், இதன் மூலம் உருவாக்கப்படும்&' என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.