இன்ஜி., படிப்பில் சேர ஆர்வம் அதிகரிப்பு

 


சென்னை: கடந்த ஆண்டைவிட இன்ஜினியரிங் படிப்பில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆன்லைன் கவுன்சிலிங் வழியே முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்காக ஆன்லைன் வழியே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 17 முதல் ஆக. 16 வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. மாணவர்களின் தரவரிசையை நிர்ணயம் செய்வதற்கான சமவாய்ப்பு எண்ணான ரேண்டம் எண் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.


மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 634 பேர் விணணப்பித்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர்.கடந்த ஆண்டை பொறுத்தவரை 1.33 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 4 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பதிவேற்றம் செய்தனர்.


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பம் அளித்துள்ளனர்; 10 ஆயிரம் பேர் அதிகமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். இதன்படி இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்க அதிக மாணவர்கள் ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: 


முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்கு மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கணினி அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கூறினார்.