செப்டம்பர் துணை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

 சென்னை; செப்டம்பரில் நடக்கும் துணைத் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கான, விண்ணப்ப பதிவு, இன்று துவங்க உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு, செப்டம்பரில் நடக்க உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, செப்., 21ம் தேதியும்; பிளஸ் 1க்கு, 29ம் தேதியும் தேர்வு துவங்க உள்ளன.இணையதளம்'பழைய பாடத்திட்டத்தில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இந்த ஆண்டு செப்டம்பர் துணைத் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற வேண்டும்.

'இதையடுத்து, நடத்தப்படும் மார்ச், 2021ம் பொதுத் தேர்வில், பழைய பாடத்திட்டப்படி தேர்வு எழுத முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.எனவே, பழைய பாடத்திட்ட மாணவர்கள், செப்டம்பர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அதேபோல், மார்ச் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காதவர்களும், விண்ணப்பிக்க தவறியவர்களும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இதன்படி, செப்டம்பர் மாத துணைத் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.'மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுத் துறை சேவை மையங்கள் வழியே, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

'வரும், 27க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.விண்ணப்பம் பதிவு செய்யப்படும் சேவை மையங்களின் விபரங்கள் மற்றும் தேர்வு குறித்த தகவல்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.பதிவிறக்கம்மேலும், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.'அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது