இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் பதிவுக்கு அவகாசம்?

 சென்னை; இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, சான்றிதழ் பதிவேற்ற கூடுதல் அவகாசம் வழங்கும்படி, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, உயர் கல்வித் துறை சார்பில், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 15ல் துவங்கி, ஆக., 16ல் முடிந்தது. இதுவரை, 1.60 லட்சம் பேர் விண்ணப்பம் பதிந்து உள்ளனர். விண்ணப்பித்த மாணவர்கள், அசல் சான்றிதழ்களின் ஒளி பிரதியை, ஆன்லைனில் பதிவேற்றும் வசதி, ஜூலை, 31ல் துவங்கியது; நாளையுடன் இதற்கான அவகாசம் முடிகிறது.

இந்நிலையில், பல மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த மறுமதிப்பீடு மதிப்பெண்கள் வர, இன்னும் இரண்டு வாரங்களாகும். எனவே, சான்றிதழ் பதிவேற்றும் வசதியை நாளை நிறுத்தினால், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்த மாணவர்கள், திருத்திய மதிப்பெண்களை பதிவேற்ற முடியாமல் போகும். எனவே, அனைத்து மாணவர்களும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வசதியாக, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.