புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை
கருத்தில் கொண்டு ஏற்கனவே 3 கட்டங்களாக ஊரடங்கு கட்டப்பாடுகள்
தளர்த்தப்பட்டு உள்ளன. தற்போது அமலில் உள்ள நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு
நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கில்
4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங் கள் வருமாறு:-
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் (நாளை மறுநாள்) செப்டம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
* செப்டம்பர் 21-ந் தேதி முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மத நிகழ்ச்சிகளை அதிகபட்சம் 100 பேர்களை கொண்டு நடத்தலாம்.
* 21-ந் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி.
* சினிமா தியேட்டர், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் 30-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும்.
* பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங் கள் செயல்பட இருந்து வரும் தடை 30-ந்தேதி வரை நீடிக்கும்.
*கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து ஆன்லைன் மூலம் பாடம் நடத்த மாநில அரசுகள் அனுமதிக்கலாம்.
*நோய்க்கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் 9 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு செல்லலாம். இதற்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வரவேண்டும்.
*மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் ஆட்கள் சென்று வரவும், பொருட்களை கொண்டு செல்லவும் போக்குவரத்துக்கு தடை கிடையாது. இதற்கான தனியாக இ-பாஸ் உள்பட எந்த முன் அனுமதியும் பெற வேண்டிய தேவை இல்லை.
*மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில, மாவட்ட, கோட்ட, நகர அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்கக் கூடாது. அதாவது நோய்க்கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது.
*செப்டம்பர் 7-ந் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி.
* 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் வீடுகளிலேயே இருப்பது நல்லது.
* வெளியே செல்வோரும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரும் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.