17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 'இ - பாஸ்'

 TN epass, epass, Tamil Nadu, TN, epass, இ பாஸ்

சென்னை: தமிழக மக்களுக்கு, சுதந்திர தின சிறப்பு செய்தியாக, நாளை மறுதினம் முதல், விண்ணப்பிப்போர் அனைவருக்கும், 'இ - பாஸ்' வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. 'ஆதார்' அல்லது ரேஷன் கார்டு விபரம் அளிக்கும் அனைவருக்கும், 17ம் தேதி முதல், எந்த தாமதமும் இன்றி, இ - பாஸ் கொடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., அனுமதி அளித்துள்ளார்.

தமிழகத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, கொரோனா ஊரடங்கு காரணமாக, இ - பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, அவசர மருத்துவ தேவை போன்றவற்றுக்கு செல்ல விரும்புவோருக்கு மட்டும், இ - பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், வெளியூர் செல்ல விரும்புவோர், பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர்.


கோரிக்கை:

மேலும், போலி இ - பாஸ் அச்சடித்து விற்பனை; அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இ - பாஸ் பெறுதல் போன்ற அத்துமீறல்களும் அதிகரித்தன. எனவே, இ - பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என, பொது மக்கள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

அதையடுத்து, விண்ணப்பிப்போர் அனைவருக்கும், இனி இ - பாஸ் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை: தமிழக அரசு, கொரோனா தொற்றில் இருந்து, பொது மக்களை பாதுகாக்க, தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, சிகிச்சைகள் அளிப்பது, நிவாரணம் வழங்குவது என, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய் தொற்றின் நிலையை கருத்தில் வைத்து, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்கு சென்று, சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும், இ - பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வழியாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கண்காணிக்கப்படுகின்றனர். நோய் தொற்று ஏற்பட்டால், அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொது மக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி, தமிழகம் முழுதும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க, நாளை மறுதினம் முதல், இ - பாஸ் வழங்கப்படும்.


உத்தரவு:

ஆதார் அல்லது ரேஷன் கார்டு விபரங்களுடன், டெலிபோன் அல்லது மொபைல் போன் எண்ணுடன் விண்ணப்பித்தால், எவ்வித தாமதமும் தடையின்றி, உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பொது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும், இ - பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைப்பிடித்து, பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தமிழகத்திற்குள், அனைவருக்கும் இ - பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தாலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வர, தற்போதுள்ள இ - பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார். இதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.