'ஆன்லைன்' வகுப்பு மாணவர்கள் தவிப்பு

சென்னை; தினமும், ஐந்து மணி நேர, 'ஆன்லைன்' வகுப்புகளால், கேந்திரீய வித்யாலயா பள்ளி மாணவர்களும், பெற்றோரும் கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.


தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்பு நடத்தப்படுகின்றன. தினமும் காலை, மாலையில், தலா, 45 நிமிடங்களுக்கு, இரண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின், கேந்திரீய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், நாள் முழுதும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தினமும் காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, ஐந்துக்கும் மேற்பட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மேலும், மொபைல் போனில், வீட்டு பாடங்களும் வழங்கப்படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள், தினமும் பல மணி நேரம், மொபைல் போனில் செலவிட வேண்டியுள்ளது. அதனால், அவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும் கூறியதாவது:தினமும், ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால், இணைய வசதிக்கான கட்டணம் அதிகமாகிறது. ஒரு மொபைல் போன் இருக்கும் வீடுகளில், ஆன்லைன் வகுப்பு காரணமாக, பெற்றோர் தங்களது அலுவல் பணிகளை பார்க்க முடியவில்லை.காலை முதல் மாலை வரையில், மொபைல் போனை பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு கண் எரிச்சலும், சோர்வும் ஏற்படுகிறது. கண்களில் நீர் வடிவதுடன், சில நேரங்களில் பிரமை பிடித்தது போல, மாணவர்கள் இருக்கின்றனர்

.ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு, மருத்துவர்கள் ஆலோசனை பெற்று, விதிகளை வெளியிட வேண்டும்.அதற்கு முன், அதிகமான நேரத்துக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, தினமும் இரண்டு மணி நேரத்துக்கு மேல், ஆன்லைன் வகுப்பை நடத்தக் கூடாது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை விட வேண்டும். முக்கிய பாடங்கள் தவிர, தொழிற்கல்வி பாடங்களை, ஆன்லைனில் நடத்தக் கூடாது.

இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வித் துறையும், மத்திய இடைநிலை கல்வி வாரியமும், கே.வி., நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.