கல்லூரி இறுதி செமஸ்டரை ரத்து செய்ய திட்டமில்லை: யுஜிசி பிரமாண பத்திரம்

புதுடில்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் இருந்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களின் கடைசி செமஸ்டர் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் எனக்கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.இதனை எதிர்த்து, ‛யுஜிசி வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும்,' உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, யுஜிசி சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று யுஜிசி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.அதில், இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகளும் செப்டம்பர் இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறு ஒரு தேதியில் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் யுஜிசி கூறியுள்ளது.