யு.ஜி.சி., விதிகளின்படி சேர்க்கை இன்ஜி., கல்லுாரிகளுக்கு உத்தரவு

சென்னை : இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை துவங்குவது தொடர்பாக, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், அறிவிப்பை பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில், ஒவ்வொரு கல்வி ஆண்டும், ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்படும். புதிய வகுப்புகள், ஜூலையில் துவங்கும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, ஆக.,1ல், வகுப்புகள் துவங்கும்.இந்தாண்டு, கொரோனா பிரச்னையால், தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.

பல மாநிலங்களில், பிளஸ் 2 தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை, வழக்கமான ஆகஸ்டுக்கு பதில், செப்டம்பருக்கு தள்ளி வைத்து, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை, ஆகஸ்டில் துவங்கி செப்டம்பருக்குள் முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளும், வரும் கல்வி ஆண்டுக்கு மட்டும், யு.ஜி.சி., அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.