தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை சரியாக வழங்க வேண்டும் - கல்வித்துறை!

தனியார் பள்ளிகள், தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாக்கியில்லாமல், ஊதியத்தை வழங்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பிரச்னையால், நாடு முழுதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, ஒரு மாதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வழக்கமான செலவுகள் குறைந்துள்ளன.அதேநேரம், மாணவர்களிடம் மூன்றாம் பருவ கட்டணம், ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்டது.ஆனால், மற்ற தொழில்களை போல, தங்களுக்கும் வருவாய் குறைந்து விட்டதாக கூறி, சில பள்ளிகளில், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என, கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.
 
இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியாக, தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
கொரோனாவை காரணம் காட்டி, தனியார் பள்ளிகள், தங்களின் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாத ஊதியத்தை தராமல் பாக்கி வைக்கக்கூடாது. அவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஊதியத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும். அந்த விபரத்தை, பள்ளி கல்வி துறைக்கும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.