தனியார் பள்ளிகளின், 100 சதவீத தேர்ச்சிக்காக, முறைகேடுகளுக்கு துணை போகும் வகையில், தேர்வு பணிகளை ஒதுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது; 2,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், எட்டு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர், வினாத்தாள் மற்றும்முதன்மை விடைத்தாள் கட்டுக்காப்பு மைய பொறுப்பாளர், வினா, விடைத்தாளை வாகனங்களில் எடுத்துச் செல்லும் அலுவலர் உள்ளிட்ட, பல்வேறு பொறுப்புகளில் ஆசிரியர்களும், பள்ளி கல்வி ஊழியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த
பணிகளை, முதன்மை கல்வி அதிகாரிகளின் உத்தரவுபடி, மாவட்டகல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆசிரியர்கள், அவரவர் சொந்த பள்ளிகள் மற்றும் சொந்த கல்வி மாவட்டங்களில், பணி அமர்த்தக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு பணி ஒதுக்கீட்டில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.அதாவது, தேர்வு கண்காணிப்பாளர், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பணி ஒதுக்கப்பட்ட பின், அந்த இடத்தை திடீரென மாற்றக் கூடாது என, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.முந்தைய காலங்களில், பிளஸ் 2 பொது தேர்வில் முறைகேடு புகார் எழுந்த பள்ளிகளில், கண்காணிப்பாளர் நியமனங்களின் முறைகேடு நடந்தது அம்பலமானது.
முதலில் சில ஆசிரியர்களுக்கு கண்காணிப்பு பணி ஒதுக்கிவிட்டு, கடைசி நேரத்தில், அவர்களை வாய்மொழியாக மாற்றி, தங்களுக்கு வேண்டிய சில ஆசிரியர்களுக்கு, சில குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் ஒதுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.குலுக்கல் முறையிலும், 'ரேண்டம்' என்ற தோராய அடிப்படையிலும், ஆசிரியர்களுக்கான தேர்வு பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், சில தனியார் பள்ளிகள், தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை, தேர்வு பணிக்கு அமர்த்த, அதிகாரிகளுக்கு மறைமுகமாக பரிந்துரை செய்கின்றன.அந்த அதிகாரிகள், பொது தேர்வுக்கு முதல் நாளில், இரவோடு இரவாக உத்தரவுகளை மாற்றி, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான ஆசிரியர்களை பணி அமர்த்துகின்றனர்.
இவ்வாறு மாற்றப்படும் ஆசிரியர்கள், அந்த பள்ளிகளின் தேர்வு மையங்களில், மாணவர்கள் காப்பியடிப்பதை கண்டும் காணாமல் இருந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின், 100 சதவீத தேர்ச்சிக்கு ஒத்துழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டுக்கு, இந்த ஆண்டு தேர்வில் முற்றுப்புள்ளி வைக்க, பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.