ஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன்னராவது தெரிவிக்க வேண்டும் -ஆசிரியர்கள்

விடுமுறையை சரி செய்யும் நாளை கடைசி நேரத்தில் அறிவிப்பதால் பள்ளிகளில் மாணவர் வருகை சரிந்து வருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பட்டியல் தயாரித்து உரிய கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வந்தனர். இதனால், அந்ததந்த நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள விழாக்கள் உட்பட உள்ளூர் விடுமுறைக்கு ஏற்ப விடுமுறை அனுமதி பெறப்பட்டு பின்னர் ஒருநாள் ஈடு செய்யும் வகையில் வேலை நாள் அறிவிக்கப்பட்டு பள்ளி செயல்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த பணியானது மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் சராசரியான வேலை நாள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளூர் பண்டிகை, திருவிழாக்களுக்கு விடுமுறை உள்ளதா என தெரியாமல் தத்தளிக்கும் நிலை இருந்து வருகிறது.
 
இதுமட்டுமன்றி, பொதுவாக ஈடு செய்யப்படும் வேலை நாளாக சனிக்கிழமை  அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பு குறைந்தபட்சம் 2நாட்களுக்கு முன்னர் வழங்கினால்தான் ஆசிரியர்கள் பள்ளி இறைவணக்கத்தின் போது வேலை நாள் குறித்த அறிவிப்பை வெளியிட உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். பள்ளி முடிய கூடிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பை உரிய அதிகாரிகள் தெரிவிப்பதால் இந்த விபரம் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக சென்று தெரிவிக்க வேண்டி உள்ளது. மேலும், பள்ளி முடியும் நேரம் என்பதால் மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் மனநிலையில் இருப்பதால் ஆசிரியர் தெரிவிக்கும் இந்த விபரத்தை சரிவர கேட்டுகொள்வதில்லை.
 
இதனால் மாணவர் வருகை பதிவானது ஈடு செய்யும் நாளில் 30 முதல் 40 சதவீதம் வரை சரிவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்கூட்டியே இந்த விபரத்தை பெற இயலாததால் தங்களது விடுமுறையில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து சரிவர திட்டமிட இயலாமல் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட கல்விதுறை அதிகாரிகள் ஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன்னராவது தெரிவிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.