பள்ளிகளுக்கு உதவ இணையதளம்

சென்னை : அரசு பள்ளிகளை மேம்படுத்த, நிதி திரட்டும் இணையதளத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.


இந்திய நிறுவன சட்டம், 2019ன்படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அவற்றின் லாபத்தில், இரண்டு சதவீத தொகையை, சமூக பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ, பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நிதி உதவி செய்கின்றன.

இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உதவும் வகையில், இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ, இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.அதேபோல், அரசு பள்ளிகளில் படித்து, தற்போது நல்ல நிலையில் உள்ள, முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த, அரசு பள்ளிகளை மேம்படுத்த, உதவி செய்யும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.அவர்களுக்கென்று எளிய இணைய வழித்தடம் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அவர்கள் செய்த உதவிகளும், வெளிச்சத்திற்கு வரவில்லை.

இக்குறைகளை களையவும், பெரு நிறுவனங்களின் பங்களிப்பையும், தன்னார்வலர்களின் பங்களிப்பையும் பெற்று, அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், இணையவழி நிதி திரட்டும் முகமையாக, contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தை, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி உள்ளது.இதனால், பொது மக்கள் பங்களிப்பு அதிகரிக்கும். நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதால், தனி நபர்களும், நிறுவனங்களும், இந்த தளத்தின் வழியே, அதிக அளவில், தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வருவர். இந்நிதி, அதற்கென துவக்கப்பட்டுள்ள, தனி வங்கி கணக்கில் பெறப்படும்.

நிதி தொடர்பான விபரங்களை, பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாக செயல்படும். அதன் பொருளாளரும், செயலரும், தொடர்பு அலுவலர்களாக இருந்து, நிதி மேலாண்மை செய்வர்.இணையதளம் துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் பங்கேற்றனர்.

தமிழகத்திற்கு தேசிய விருது!இணைய வழி கற்றலுக்கு உதவும், 'DIKSHA' என்ற இணையதளத்தை, 4.92 கோடி பேர், 'ஸ்கேன்' செய்தும், 2.39 கோடி பேர், தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி உள்ளனர்.திக்சா செயலியை பயன்படுத்துவதில், சிறந்த நான்கு மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. அதை பாராட்டி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில், தேசிய விருது, தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருதை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், நேற்று முதல்வரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.