8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு?

எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். 
இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, எட்டாம் வகுப்புக்கான கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்வதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 25 மதிப்பெண்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடத்துவது போல், எட்டாம் வகுப்புக்கும் நடத்தலாம் என, ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், எட்டாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் ஆய்வகங்களை பயன்படுத்தஅனுமதி அளிக்கப்படும். பள்ளிகளில் சிறப்பு செய்முறை தேர்வு பயிற்சியும் அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.