யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்

கோவை: 'டிக்கெட் ரத்து செய்யும் பயணியர், முன்பதிவு, வங்கி கணக்கு விபரங்களை, சமூக வலைதளங்களிலும், தனி நபரிடமும் பகிர வேண்டாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தியுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான,
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணிக்கின்றனர்.




'இ - டிக்கெட்' ரத்து செய்யப்படும் பட்சத்தில், செலுத்திய கட்டணம், பயணியின் வங்கிக் கணக்கில், தானாக செலுத்தப்படும்.ரத்து கட்டணத்தை திரும்ப பெற, வங்கிக் கணக்கு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. டிக்கெட் விபரங்களை, இணையதளத்தில் பகிர வேண்டிய அவசியமும் இல்லாத நிலையில், மோசடி பேர்வழிகள், ஐ.ஆர்.சி.டி.சி., போன்ற பெயரில், போலி இணையதளங்களை உருவாக்கி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல, ரயில்வே ஸ்டேஷன்களில், அப்பாவிமக்களிடம், வங்கிக் கணக்கு உட்பட விபரங்களை, விண்ணப்பமாக பெற்று, மோசடியில் ஈடுபடுவோரும் அதிகரித்து வருவதாக, புகார் எழுந்துள்ளது.இதையடுத்து, 'வங்கிக் கணக்கு, கிரெடிட், டெபிட் கார்டு, டிக்கெட் முன்பதிவு விபரங்களை, சமூக வலைதளங்களிலும், தனி நபரிடமும் பகிர வேண்டாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தன் இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.மேலும், 'பயணியர் ஏமாறுவதை தவிர்க்க, அதிகாரப்பூர்வ, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது.