'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி அரசு சின்னமாக அறிவிப்பு

சென்னை:'தமிழ் மறவன்' என்ற பட்டாம்பூச்சி, தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சின்னங்களாக, ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் கோபுரம், பனை மரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன.இந்நிலையில், 'தமிழ் மறவன்' என்ற பட்டாம்பூச்சியை, தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கக்கோரி, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர், அரசுக்கு பரிந்துரை செய்தனர்.அவர்களின் பரிந்துரையை ஏற்ற, தமிழக அரசு, தமிழ் மறவன் பட்டாம் பூச்சியை, அரசு சின்னமாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், ஷம்பு கல்லோலிகர் பிறப்பித்துள்ளார்.
சிறப்பு என்ன?'தமிழ் மறவன்' பட்டாம் பூச்சிக்கு, போர்வீரன் என்ற, பெயரும் உண்டு. இதன் வெளிப்புற இறகுகள், அடர்ந்த பழுப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை முதன்மையாக பெற்றிருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும், 32 வகை பட்டாம்பூச்சிகளில், இதுவும் ஒன்று.இந்த பட்டாம்பூச்சிகள் தனியாக செல்லாது; கூட்டமாகவே செல்லும். சில இடங்களில் மட்டும் தான் வசிக்கும்.