வரலாறு காணாத வேலை இல்லா திண்டாட்டம் 6.1% அதிகரிப்பு: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1
சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நகர்புறங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் 2017-18 ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை குவித்தது. இதையடுத்து அப்படியொரு தகவல் வெளியிடப்படவில்லை என மத்திய அரசு அன்று மறுத்தது.
தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.