108 மாணவர்களுக்கு இன்று கவுன்சிலிங்

சென்னை : காஞ்சிபுரம், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், 108 பேரை, தனியார் மருத்துவக் கல்லுாரியில் சேர்ப்பதற்கான கவுன்சிலிங், இன்று
நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லுாரில், பொன்னையா ராமஜெயம் என்ற, தனியார் மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வந்தது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாததால், கல்லுாரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, 2016 - 17ம் கல்வியாண்டைச் சேர்ந்த, 108 மாணவர்களை, வேறு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 108 மாணவர்களையும், ஆறு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ப்பதற்கான, கவுன்சிலிங், சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில், இன்று நடைபெற உள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், 'ஆதார்' உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.