அரசு ஊழியர்கள் மீதான வழக்கு; வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை

சென்னை: ''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்,'' என, மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.


பல முறை பேச்சு:



சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பின், தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் ஆகியோர் எழுந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை, திரும்பப் பெற வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினர்.


அதற்கு பதில் அளித்து, அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுடன் பல முறை பேச்சு நடத்தப்பட்டது. அரசின் நிதி நிலையை எடுத்துக் கூறினோம். அதை ஏற்காமல், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மொத்தம், 7.41 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 2.10 லட்சம் பேர், அதாவது, 28 சதவீதத்தினர் மட்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கைதுஅதில், சாலை மறியலில் ஈடுபட்ட, 6,521 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 1,656 பேர், சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின், போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, திரும்பப் பெறுவது குறித்து, அரசு ஆராய்ந்து முடிவு செய்யும்.


போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகளின் தன்மையைப் பொறுத்து, திரும்பப் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.