மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக
மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக கோ.புதுப்பட்டியில் வருவாய்த்துறையினர் வசம் உள்ள பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு, 198.27 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.
மின் வாரியத்துறையினர் அந்த இடத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்ம்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். எய்ம்ஸ் கட்டுமானக் குழுவினரும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் தெரிவித்தது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதை உறுதிபடுத்தும் விதமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சரவைக்கும் நன்றி தெரிவித்தார்.