டி.என்.பி.எஸ்.சி. நடத்திய 1,338
காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று
வெளியானது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 228 பேர் தேர்ச்சி
அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை
தேர்வை கடந்த மாதம் 11-ந் தேதி நடத்தியது. மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து
970 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர்
இந்த தேர்வை எழுதினார்கள்.
டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் தேர்வு
முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன்படி,
முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதங்களிலும், முதன்மை தேர்வு முடிவு 2
மாதங்களிலும், எழுத்து தேர்வு முடிவு 3 மாதங்களிலும் வெளியிடப்படும்
என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில், குரூப்-2 முதல்நிலை தேர்வு
நடந்து முடிந்த 36 நாட்களில் திருத்தும் பணியை நிறைவு செய்து, தேர்வு
முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு அடுத்த
ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 23-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட
இருக்கிறது. முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194
விண்ணப்பதாரர்கள், தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு
கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 24-ந்
தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய
விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கான கட்டணத்தையும் வருகிற 24-ந் தேதி
முதல் ஜனவரி 10-ந் தேதி வரை www.tnps-c-ex-ams.net என்ற இணையதளம் வழியே
செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்ப கட்டணம்
செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள்
முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ந்
தேதி நடைபெற இருப்பதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த நூலகர்
பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேறு ஒருநாளில் நடத்தப்படும். இதற்கான
தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள்
மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையம், சிவில் சர்வீசஸ் தேர்வு உள்ளிட்ட
பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.
அந்தவகையில், தற்போது தேர்வு முடிவு
வெளியாகி இருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கு
என்றும் இலவச பயிற்சியை அளித்தது. இதில் கலந்து கொண்டு தேர்வு
எழுதியவர்களில் 228 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் முதன்மை
தேர்வுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டு
இருக்கின்றன. இதில் சேர்ந்து பயில விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக சைதை
துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம், 28, முதல் பிரதான
சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில்
வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.
இந்த தகவலை மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.