'கஜா' புயலில் 500 பள்ளிகள் சேதம்?

கஜா' புயலால், டெல்டா மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதம் அடைந்துள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவற்றை சரிசெய்ய, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.வங்க கடலில் உருவான, கஜா புயல், பள்ளி, கல்லுாரிகளையும் விட்டு வைக்கவில்லை. 


பல இடங்களில் சுவர்கள் இடிந்தும், கூரைகள் துாக்கி வீசப்பட்டும், சேதம் ஏற்பட்டுள்ளது. இடிந்த பள்ளி கட்டடங்களை சீரமைக்க, தனி குழுக்களை அமைத்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தர விட்டுள்ளார்.நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுவினர், ஒவ்வொரு பகுதியாக, பள்ளிகளில் சேதமான உள்கட்டமைப்பு குறித்து, ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, கண்டறியப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், முதற்கட்ட ஆய்வறிக்கை, பள்ளி கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் பணிகளை மட்டும், உடனடியாக மேற்கொள்ள, தற்காலிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, பள்ளியை சுத்தம் செய்து, திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களை போல், புயல் தாக்கிய திண்டுக்கல் மாவட்டத்திலும், 40 பள்ளிகள் சேதமடைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.