50 சதவீதம் ஏ.டி.எம்.,கள் மார்ச்சுக்குள் மூடப்படும்

சென்னை, நாடு முழுவதும் உள்ள, ஏ.டி.எம்., மையங்களில், 50 சதவீதம், வரும் மார்ச் மாதத்துக்குள் மூட வாய்ப்பு உள்ளதாக, ஏ.டி.எம்., தொழில் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சமீபத்திய ஆய்வின்படி, நாடு முழுவதும் தோராயமாக, 2.38 லட்சம், ஏ.டி.எம்., மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதில், 1.13 லட்சம் மையங்கள், 2019 மார்ச் மாதத்துக்குள் மூடப்படும் வாய்ப்பு உள்ளது.இதில், 1 லட்சம் ஏ.டி.எம்.,கள், வங்கிகள் சாரா இடங்களில் நிறுவப்பட்டவை. நகர்புறங்களில் இல்லாத, அதிகம் இயக்கப்படாத காரணங்களால், இந்த ஏ.டி.எம்.,கள் மூடப்பட உள்ளன.இது நடந்தால், பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்ட பயனாளிகள் மற்றும் அரசு மானியம் பெறும் பயனாளிகள் அதிகம் பாதிக்கப்படுவர். இதனால், பண மதிப்பிழப்பின்போது நடந்ததுபோல், பணம் எடுக்க, நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்.

மேலும், ஏ.டி.எம்.,கள் மூடப்படுவதால், பல ஆயிரம் பேர், வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். ஏ.டி.எம்., இயந்திரங்களில் உள்ள, மென்பொருளை மேம்படுத்துதல் மற்றும் பணம் கையாளும் தரம் ஆகியவற்றுக்காக, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஒழுங்குமுறை விதிமுறைகளே, ஏ.டி.எம்.,கள் மூட காரணமாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.