4 ஆயிரம் பேர் பாதிப்பு; 29 பேர் பலி டெங்கு, பன்றி காய்ச்சலை விரட்ட என்ன வழி : மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை

மதுரை: நடப்பாண்டு தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில், 29 பேர் இறந்துள்ளனர். அரசின் சீறிய முயற்சியால் காய்ச்சல் கட்டுக்குள் இருந்தாலும் நிறுவனம், வீடுகளில் சுகாதாரம் கடைபிடித்தால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.ஜெ.சங்குமணி, பொது மருத்துவர், அரசு மருத்துவமனை, மதுரை:
வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் பரவும். வீடு, நிறுவனங்களில் பயன்படுத்தாத டயர், சிரட்டை, சிமென்ட் தொட்டிகளில் தேங்கும் நல்ல நீரில் 'ஏடிஸ்' கொசு வளரும். மூன்று வாரம் உயிர்வாழும் இவை நல்ல நீரில் ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கில் முட்டையிடும். இனப்பெருக்கம் செய்த இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு பறக்கும். தொடர்ந்து 3 நாட்கள் டயர்,சிரட்டைகளில் 2 மி.மீ., நல்லநீர் தேங்கினாலே ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும். காய்ச்சல், சோர்வு, தலை, உடல், எலும்பு வலி இதற்கான அறிகுறி. உரிய சிகிச்சை பெறாவிடில் உயிரிழப்பு நேரிடும். காய்ச்சல் வந்தால் உடனே அரசு மருத்துவமனை செல்லவும். இவ்வகை காய்ச்சல் உடலில் நீர்சத்தை குறைக்கும்.இதை தவிர்க்க இளநீர், உப்பு சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்., பவுடர்) , கஞ்சி அருந்த வேண்டும். ஏடிஸ் கொசு உருவாகாத விதத்தில் வீடு, நிறுவனம், கட்டுமான நிறுவனங்களை சுற்றி நல்ல நீர் தேங்காத வகையில் சுகாதாரம் காக்க வேண்டும். இன்புளூயன்சா (எச்1 என்1) வைரஸ் கிருமியால் பன்றி காய்ச்சல் பரவுகிறது. சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி இதற்கான அறிகுறி. இக்கிருமி தொற்று ஏற்படுவோருக்கு இருமல், தும்மல் வரும் போது அக்கிருமி காற்றில் பரவும். எனவே இக்கிருமி பாதித்தோர் கைகளை சோப்பு போட்டு கழுவாமல் வாய், மூக்கு, கண்களை தொடக்கூடாது. இக்காய்ச்சல் பாதித்தோரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். காற்று மூலம் இக்கிருமி பரவுவதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரம் பின்பற்றுவது கட்டாயம்.

அர்ஜீன்குமார், துணை இயக்குனர், சுகாதாரத்துறை, மதுரை:
டெங்கு, பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து, கலெக்டர் அறிவுறுத்தல்படி புகை மருந்து அடித்தல், குடிநீர் தொட்டிகளில் குளோரினேஷன் செய்தல், ஏடிஸ் கொசு வளராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தி டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கிறோம். மழை காலங்களில் தான் டெங்குவை பரப்பும் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரிக்கும். தீவிர கண்காணிப்பால் டெங்கு கட்டுக்குள் உள்ளது. பன்றி காய்ச்சல் பரவுவதை தவிர்க்க பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள், மருத்துவமனைகளில் கைகளை சோப்பு போட்டு கழுவும் முறையை பின்பற்ற வலியுறுத்தி வருகிறோம். தினமும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள கிராமங்களை தேர்வு செய்து அங்கு களப்பணிகளை துரிதப்படுத்தி காய்ச்சலை கட்டுக்குள் வைத்துள்ளோம்.

ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு செயலர், சுகாதாரத்துறை:
தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலம், 140 நாடுகளில் டெங்கு காய்ச்சல் வழக்கமாக உள்ளது. இதற்காக அச்சம் தேவையில்லை. பொதுவாக ஆண்டு முழுவதும் டெங்குவை பரப்பும் கொசுக்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீடு, கட்டடங்களில் தேங்கும் மழைநீரில் ஏடிஸ் கொசுக்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்கிறது. இதனால் தான் இம்மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்பு இருமடங்கு அதிகரிக்கும்.காய்ச்சல் பாதித்தோரின் ரத்த தட்டணுக்கள் பரிசோதனைக்கு 1,500, எலிசா பரிசோதனைக்கு 131 மையங்கள் செயல்படுகிறது. நோயாளிகளுக்கு வழங்க 20 லட்சம் 'டாமிப்ளூ' மாத்திரை இருப்பில் உள்ளது. சிகிச்சை அளிக்கும் டாக்டர், ஊழியர்கள் தற்காப்பிற்கு 1 லட்சம் தடுப்பூசி போடப்பட்டது. இன்னும் 1 லட்சம் ஊசிகள் வரவுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் டெங்கு பாதிப்பு குறைவு தான். கட்டுமான பணி நடக்கும் இடம், வீடுகளை சுற்றி மழைநீர், நல்ல நீர்தேங்காத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கர்நாடகா, ஆந்திரா உட்பட பிற மாநிலங்களுக்கு சென்று வருவோர் மூலமும் பன்றி காய்ச்சல் பரவுகிறது. இக்காய்ச்சல் பரவாமல் தடுக்க கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பின்னரே அலுவலகம், வீட்டுக்குள் சென்றால் கிருமி தாக்குதலில் இருந்து காக்கலாம். அரசு சீறிய முயற்சி எடுத்து டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுக்குள் வைத்துள்ளது என்றார்.