பன்றிக் காய்ச்சல் பாதித்த 260 பேருக்கு தீவிர சிகிச்சை: சுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி

திருநெல்வேலி: பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 260 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி
தெரிவித்தார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்புப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை சனிக்கிழமை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
அங்கு, வைக்கப்பட்டிருந்த நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் உட்பொருட்களை பார்வையிட்டு சுற்றுப்புற தூய்மையாக வைத்தல், கை கழுவுதல் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
பின்னர், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைந்து வருகிறது. நிகழாண்டு பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறி தென்பட்டதும் கவனக் குறைவாக இருந்து விடக் கூடாது. உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரம் பேண வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பொது இடங்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோர், பொது போக்குவரத்தை பயன்படுத்து வோர் தினமும் பல முறை கைகளை கழுவுதல் அவசியமாகும்.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் டாமி புளு போன்ற மாத்திரைகள் 20 லட்சம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 50 ஆயிரம் மாத்திரைகள் இருப்பு உள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அவர்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களு க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல் பாதித்தவர்கள் மருந்து உட்கொள்ளக்கூடாது என்றார் அவர்.
ஆட்சியர் கூறியது: பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழுக்கள், குழந்தைகள் நலத்திட்ட குழுக்கள் மூலம் தடுப்புப் பணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிகழாண்டு டெங்கு, பன்றிக் காய்ச்சல் வெகுவாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.