'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்காக வழிகாட்டு மையம்!!

'கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்காக, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களில், வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.'டிஸ்லெக்சியா' என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி தருவதற்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில், 30 பேர், சிறப்பு குழந்தைகள் மற்றும் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கான, பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கான வழிகாட்டு மையங்கள், 32 மாவட்டங்களில் அமைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக, சென்னையில், மாநில மகளிர் மேல்நிலை பள்ளியில், வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு, ஆசிரியர்களுக்கான, டிஸ்லெக்சியா சிறப்பு பயிற்சி கருத்தரங்கம், பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று துவங்கியது.

பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் பங்கேற்றனர்.ஆசிரியர்களுக்கான இப்பயிற்சியை, 'மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன்' என்ற, தனியார் தொண்டு நிறுவனம் அளிக்க உள்ளது.

அதன் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:டிஸ்லெக்சியா மாணவர்களை, முன்கூட்டியே கண்டறிந்தால், அவர்களை எளிதாக, பயிற்சியின் வாயிலாக, இயல்பு நிலைக்கு மாற்ற முடியும்.இதற்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் கற்றல் முறைகளை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.