மின் வாரிய உதவி பொறியாளர் பதவி தேர்வை நடத்த தாமதம் செய்வது ஏன்

உதவி பொறியாளர் பதவிக்கான எழுத்து தேர்வை நடத்தாமல், மின் வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின் வாரியத்தில், 1992 முதல், 2014 வரை நடந்த, உதவி பொறியாளர்கள், கள ஊழியர்கள் நியமனங்களில், பணம், அரசியல் சிபாரிசு உடையோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இதற்கு, எழுத்து தேர்வு இல்லாமல், கல்வி தகுதி, நேர்காணல் வாயிலாக, ஆட்கள் தேர்வு நடந்ததே முக்கிய காரணம்.

இந்நிலையில், முதல் முறையாக, 2016ல், எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக, 375 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நேர்காணலை நடத்தும் அதிகாரி யார் என்ற விபரம் தெரியாமல் இருக்க, அதை, அலுவலகத்தில் நடத்தாமல், ஓட்டலில் நடத்தும் புதுமை நடந்தது.இதே முறையில், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்கு, பட்டதாரிகளிடம், அதிக வரவேற்பு காணப்பட்டது. நேர்காணல் தொடர்பாக, சில கட்சிகள், புகார் எழுப்பின.

இதையடுத்து, நேர்காணல் இல்லாமல், எழுத்து தேர்வு நடத்தி, அதில், அதிக மதிப்பெண் எடுப்போரை மட்டுமே வேலைக்கு தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது.இதன்படி, 325 உதவி பொறியாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பை, பிப்., 14ல் வெளியிட்டது. இதற்கு, மார்ச், 6 வரை அவகாசம் வழங்கப்பட்டது.இதற்கு, 87 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். ஐந்து மாதங்கள்ஆகியும், இதுவரை, தேர்வை நடத்தாமல் இருப்பது, பட்டதாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:

எழுத்து தேர்வு வாயிலாக, பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படாது. இருப்பினும், தேர்வை நடத்தவில்லை.இது தொடர்பாக, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்ததும், ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும்' என்றனர். ஆகஸ்ட் முடிந்தும், தேர்வு நடத்தப்படவில்லை.

விரைவில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானால், நடத்தை விதியை காரணம் காட்டி, எழுத்து தேர்வை நடத்த மாட்டார்கள்.எழுத்து தேர்வால், ஆதாயம் பெற முடியாது என்பதால் தான், அதை நடத்த தாமதம் செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, விரைவில் தேர்வை நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -