மேல்நிலைப் பள்ளிகளில் T.C கேட்கும் கணினிஅறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள்!!

சிவகங்கை:கலந்தாய்வில் பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுச்சென்றுவிட்டதால் மாணவர்கள் டி.சி.கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2,570 மேல்நிலைப் பள்ளிகளில் கணினிஅறிவியல் பாடப்பிரிவு உள்ளது. இதில் 800 பள்ளிகளில் நிரந்தர கணினி ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் கணினிஆசிரியர்களை நியமித்தனர்.சமீபத்தில் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் 600 க்கும் மேற்பட்ட கணினிஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்று சென்றனர். 


அந்த பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் காலியாகிவிட்டது. அதே நேரம் இடமாறுதல் பெற்றவர்கள் பணியில் சேரும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர்.மேலும் நிரந்தர ஆசிரியர்கள் மாறிச் சென்றதால், அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் காலியிடங்கள் ஏற்பட்டன. சமீபத்தில் 'புதிதாக கணினி ஆசிரியர்களை நியமிக்க போவதாக,' பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்தார். இதனால் அப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கமுடியவில்லை.


ஒரு மாதமாகியும் பாடம் நடத்தாததால் மாணவர்கள் மாற்றுச் சான்று கேட்டு வருகின்றனர். இதனால் திரிசங்கு நிலையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர்-மேக்ஸ், ஆர்ட்ஸ்-கம்ப்யூட்டர் என பிரிவுகளுக்கும் கணினி அறிவியல் பாடம் நடத்தப்பட்டது. 


புதிய பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர்-மேக்ஸ் பிரிவுக்கு கணினிஅறிவியல், ஆர்ட்ஸ்-கம்ப்யூட்டர் பிரிவுக்கு கணினி பயன்பாடு, புதிதாக தொழிற்கல்விக்கு கணினி தொழில்நுட்பம் என, மூன்று பாடப்புத்தகங்கள் உள்ளன. கணினி ஆசிரியர் இல்லாமல் பாடம் நடத்த முடியாது. அப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் மாணவர்கள் வெளியேறிவிடுவர், என்றார்