‘நீட்’ தேர்வு மையங்களில் மாற்றம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கி, இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டு இருந்தது.


இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விவரத்தை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் ‘நீட்’ தேர்வு வரும் 6-ந் தேதியன்று நடைபெறுவதாகவும், தற்போது மிகவும் குறைந்த காலஅவகாசமே இருப்பதாலும் தேர்வு மையங்களை உடனடியாக மாற்ற முடியாது என்று சி.பி.எஸ்.சி. தரப்பில் கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை மாற்றி அமைத்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் குழப்பம் அடைவார்கள் என்றும், எனவே தேர்வு மையங்களை மாற்ற தேவை இல்லை என்றும் கூறி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், மாணவர்கள் இந்த ஆண்டில் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என்றும், அடுத்த ஆண்டில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் சி.பி.எஸ்.இ. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.