மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திறந்துவைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்தது, பள்ளி விளையாட்டு விழாவின்போது வாயு உருளை வெடித்து மாணவர் உயிரிழந்தது, பள்ளிக் கட்டிடத்தின் மாடியிலிருந்து மாணவர் விழுந்து உயிரிழந்தது போன்ற துயரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்றபோதிலும், பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை காரணமாகவும், மெத்தனப்போக்கினாலும் நடைபெற்றுவருவது ஏற்கத்தக்கதல்ல.

பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே முழுப்பொறுப்பாகும். பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை நம்பியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

மாவட்ட அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்படும் குழுவால் அளிக்கப்படும் அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு சுட்டிக்காட்டப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாக பிரதிநிதி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகம் முழுமையும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். முட்புதர்கள், கழிவு பொருட்களின் குவியல், கற்குவியல் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடங்கள் இல்லாமல் பள்ளி வளாகம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் கிணறு இருப்பின் அதனை தடிமனான இரும்புக்கம்பி கொண்டு வலை அமைத்து பாதுகாப்பாக மூடவேண்டும். கிணற்றை சுற்றி சுவர் எழுப்பப்பட வேண்டும். கிணற்றுக்கு செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தால் அதனை மூடி பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும்.

பள்ளிக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும். ஆய்வகத்தில் பயன்படுத்தும் அமிலம் மற்றும் ரசாயனங்கள் உரிய ஆசிரியரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

மழலையர் மற்றும் தொடக்கநிலை வகுப்பு குழந்தைகளை நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு அழைத்துச்சென்றுவர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கழிவறைக்குள் எக்காரணம் கொண்டும் நீர்த்தேக்கத் தொட்டி இருக்கக் கூடாது. குழாய் வழியாக மட்டுமே கழிவறைக்குள் தண்ணீர் செல்ல வேண்டும். கழிவுநீர் தேக்கத்தொட்டி பாதுகாப்பாக மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். அதனை சுத்தம் செய்யும் பணி விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு அகப்படாவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வாயு, எரிவாயு உருளை பயன்பாடு, மின்சாதனங்கள் பயன்பாடு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளை உரிய அலுவலரின் முன் அனுமதி இல்லாமல் பள்ளி வளா கத்தினைவிட்டு வெளியே அழைத்துச்செல்லக் கூடாது.

கல்வி நிறுவனங்களின் வாகன விபத்தினை தடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது