நிலக்கரி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்!

கோல் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான வரைவைத் தயாரிக்க புதிய குழுவை
மத்திய அரசு அமைத்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிசம்பர் 27ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ”நிலக்கரி ஊழியர்களின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான வரைவுகளைத் தயார் செய்வதற்காக பிரத்தியேகக் குழு ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி அளவு அதிகரித்து வரும் சூழலில் நிலக்கரி ஊழியர்களுக்கான நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சுமார் 3 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள கோல் இந்தியா நிறுவனம் நடப்பாண்டில் தனது நிலக்கரி உற்பத்தி இலக்கை 600 மில்லியன் டன்னாக உயர்த்தியது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.3 சதவிகிதம் அதிகமாகும்.

அடுத்த ஆண்டில் உற்பத்தி அளவு 28.95 சதவிகித உயர்வுடன் 773.70 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, 2022ஆம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தி 1.5 பில்லியின் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலக்கரித் துறைச் செயலாளர் சுஷீல் குமார் தெரிவித்தார். இந்த 1.5 பில்லியின் டன் உற்பத்தியில், சுமார் 1 பில்லியின் டன் கோல் இந்தியா நிறுவனத்தாலும், மீதப் பங்கு தனியார் நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்படும். இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு இந்த இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.