இடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMALAR

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை,
திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிச., 21ல், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியிலும், சென்னை மாவட்டத்திலும், வரும், 27 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதனால், இங்குள்ள பள்ளிகளில், ஏற்கனவே அறிவித்தபடி, அரையாண்டு தேர்வை நடத்த முடியுமா என்பது தெரியவில்லை.

அதாவது, தமிழகம் முழுவதும், 10ம் வகுப்புக்கு, டிச., 11ம் தேதியும், பிளஸ் 1,
பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 7ம் தேதியும் அரையாண்டு தேர்வுகள் துவங்கி,
டிச., 23ல் முடிகின்றன. தொடக்கப் பள்ளிகளிலும், இதே காலத்தில் தேர்வு
நடக்கிறது.

ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில், டிச., 21ல் தேர்தல் என்பதால்,
தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன், ஆர்.கே.நகர் தொகுதி மற்றும் அதை
ஒட்டிய பகுதி பள்ளிகளில், ஓட்டுச்சாவடி அமைப்பு உள்ளிட்ட தேர்தல்
பணிகள் துவங்கி விடும். பாதுகாப்புக்கு அழைக்கப்படும் துணை ராணுவத்தினர்
மற்றும் வெளி மாவட்ட போலீசார் தங்க, பள்ளிகளில் முகாம் அமைக்க
வாய்ப்புள்ளது.

அதனால், ஆர்.கே.நகர் மற்றும் அருகில் உள்ள தொகுதி பள்ளிகளில்,
தேர்வு நடத்த முடியாது. அதேபோல், வெளிமாவட்ட ஆசிரியர்களை,
தேர்தல் பணிக்கு வரவழைக்க வேண்டும். தேர்தலுக்கு, 10 நாட்கள் முன்,
வாக்காளர் விபரங்களை சரிபார்க்க, ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட
வேண்டும். அவர்கள், தங்கள் பள்ளிகளில், தேர்வு பணிகளை கைவிட்டு,
சென்னை வர வேண்டும். அதனால், அரையாண்டு தேர்வு பணியில்,
அவர்களால் ஈடுபட முடியாது.

மேலும், தேர்தல் நடக்கும் நாளுக்கும், அதற்கு முன்பும் பள்ளிகளில்,
அரசியல் கட்சியினர், தேர்தல் அதிகாரிகள் முகாமிடுவதால், அரையாண்டு
தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்படும்.

டிச., 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், பள்ளிகளுக்கு, டிச., 24 முதல்,
விடுமுறை அளிக்க வேண்டிய நிலையும் உள்ளது. எனவே, புதிய தேர்வு
அட்டவணையை வெளியிட, தமிழக பள்ளிக் கல்வித்துறை

ஆலோசித்து வருகிறது