233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பு; இன்று முதல் அமல்

புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யில் 28 சதவீத வரி விகிதத்தில் இருந்த, 178 பொருட்கள் உட்பட, 233 பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று(நவ.,15) முதல் அமலாகிறது.


ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூலை, 1ல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற நான்கு வரி விகிதங்களில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறையால், சில பொருட்களுக்கான விலை, முந்தைய வரி விதிப்பு முறைகளைவிட அதிகரித்தது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் கடந்த 10ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு இன்று(நவ.,15) முதல் நாடு முழுவதும் அமலாகிறது.

இதில் அனைத்து வகை ஹோட்டல்களுக்கான, ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணமும், 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,யில், 28 சதவீத வரி விகிதத்தில் இருந்த, 178 பொருட்களுக்கான வரி, 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இனி, 50 பொருட்கள் மட்டுமே, 28 சதவீதவரி விகிதத்தில் இருக்கும்.