தென் மாவட்டங்களில் மழை : பாளையங்கோட்டையில் 13 செ.மீ.,

பல ஆண்டுகளாக, போதிய மழையின்றி வறண்ட தென் மாவட்டங்களில், இரு நாட்களாக, கனமழை கொட்டியது. தென்மேற்கு பருவ மழையை நம்பியுள்ள தென்
மாவட்டங்களுக்கு, இரு ஆண்டுகளாக, பருவ மழை கைகொடுக்கவில்லை. இந்த ஆண்டும், தென்மேற்கு பருவ மழை, தென் மாவட்டங்களில், வழக்கத்தை விட குறைவாகவே பெய்தது.
இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு, ஒரு வாரம் தாமதமாக துவங்கினாலும், தமிழகத்தின், வட கிழக்கு மாவட்டங்கள் மட்டுமின்றி, இரு நாட்களாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், நல்ல மழையை கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக, கனமழையை பார்த்திராத, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளிலும், கனமழை பெய்துள்ளது. பாளையங்கோட்டை, திருச்செந்துார், சேரன்மகாதேவி, ஒட்டப்பிடாரம், நாங்குநேரி, சாத்தான்குளம் போன்ற இடங்களில், கனமழை பெய்துள்ளது. நேற்று காலை, ௮:௩௦ மணி நிலவரப்படி, ௨௪ மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, பாளையங்கோட்டையில், 13.4 செ.மீ., மழை பெய்துள்ளது.
திருச்செந்துார், 9; சிதம்பரம், கேளம்பாக்கம், ஸ்ரீவைகுண்டம், 8; நாகை, சேரன்மகாதேவி, வேதாரண்யம், 7; தரங்கம்பாடி, ஒட்டப்பிடாரம், காரைக்கால், பரங்கிப்பேட்டை, மாமல்லபுரம், சீர்காழி, ராதாபுரம், 5.
சென்னை, டி.ஜி.பி., அலுவலகம், அணைக்காரன் சத்திரம், பூந்தமல்லி, மணிமுத்தாறு, சோழிங்கநல்லுார், நுங்கம்பாக்கம், அம்பாசமுத்திரம், 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில், 1-3 செ.மீ., வரை மழை பெய்தது.