கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?

மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால், அது மாணவர்களை பாதிக்கும்.
இது தொடர்பாக, கல்விக்கடன் அதிரடிப்படை அமைப்பாளர், சீனிவாசன் கூறியது:

ஆண்டு வருமானம், 4.5 லட்சம் ரூபாய்க்கு மிகாத, பெற்றோரின் வாரிசுகளுக்கு, வங்கிகளில், கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படுகிறது. படிக்கும் காலத்துடன், கூடுதலாக, ஓராண்டு வரை, முழுமையாக வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.

கல்விக்கடன் கொடுத்த வங்கிகள், வட்டி மானியத்தை பெற, குறிப்பிட்ட காலத்திற்குள், தொடர்பு வங்கியான கனரா வங்கி வழியாக, மத்திய மனித வள அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில், வங்கி மேலாளர்கள், விண்ணப்பிக்க மறந்து விடுவர். அப்போது, கடன் வாங்கிய மாணவர் மீது, வட்டி சுமை சென்று சேருகிறது.

இந்நிலையில், கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2016 - -17க்கான, வட்டி மானியத்தை, கனரா வங்கியின் இணையதளத்தில், ஆக., 23 முதல், நவ., 23 வரை, விண்ணப்பித்து, வங்கிகள் திரும்பப் பெறலாம், என, மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், அந்தந்த வங்கிக்கு சென்று மேலாளரிடம், அது பற்றி நினைவூட்டலாம். தவறும் அதிகாரிகள் மீது, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.