நீட்' தேர்வுக்கு விலக்கு பெற டில்லியில் அமைச்சர் முகாம்

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக, டில்லியில் முகாமிட்டுள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார்.


 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பான சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றுத்தரும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சில தினங்களுக்கு முன், டில்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். நேற்று முன்தினம் டில்லி சென்ற, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை, மூன்று முறை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார். பின், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

நேற்று, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் சேர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கை சந்தித்து, அதே கோரிக்கையைவலியுறுத்தினார். தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணனும் உடன் சென்றார்.