நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் விரைவில் மாற்றம்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கான, விதிகளில் மாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து, விருது வழங்க, விதிகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. தமிழக
பள்ளி கல்வித்துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட்டு, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாக ஒரே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில், விருது பெறுவது குறித்து விபரம் தெரிந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால், பல ஆசிரியர்கள், திறமையாக பாடம் நடத்தியும், மாணவர்களை நல்வழிப்படுத்தியும், சாதனைகள் நிகழ்த்துகின்றனர்.இதுபோன்ற ஆசிரியர்கள் பலர், விருது பெற முயற்சிப்பது கிடையாது. சிலர் விருது பெற முயற்சித்தாலும், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் விட்டு விடுகின்றனர்.

எனவே, குறிப்பிட்ட ஒரு குழுவினரே விண்ணப்பித்து, விருது பெறும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்றவும், பயிற்றுவித்தலில் மற்றும் மாணவர்களை வழி நடத்துவதில், சிறந்த ஆசிரியர்களை மட்டுமே அங்கீகரிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், நல்லாசிரியர் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆண்டே, புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.