மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்

சென்னை மாநகராட்சி அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 70 உயர், மேல்நிலைப்பள்ளி மற்றும் 14 நடுநிலைப்பள்ளிகளில் வள வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளது. 
திரையின் மூலம் தொழில்நுட்பம் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும்போது, அது மாணவர்களை ஈர்க்க முடியும் என்ற நோக்கத்தில் சாம்சங் என்ற நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக 20 மேல்நிலை மற்றும் 8 நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் செய்து தர புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வகுப்பறையில் 1 எல்எப்டி ஸ்மார்ட் ஸ்கிரீன், 40 கணினிப் பலகைகள், பிரிண்டர், சர்வர், யுபிஎஸ் மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திற்கான மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வள வகுப்பறை பாடத்திட்டத்தின் மூலம் 29,596 மாணவ,மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.  இத்திட்டத்திற்கு ரூ.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.