'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்

''இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.



பின் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூன் 27ல் துவங்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், நீட் தேர்வு முடிவு தாமதமானால், கவுன்சிலிங் தேதி தள்ளிப்போகும். தற்போதைய நிலையில் 200க்கு 200, 'கட் ஆப்' பெற்றவர்கள் 59 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 199 கட் ஆப் பட்டியலில் உள்ள 811 பேரில் 645 பேரும்; 198 கட் ஆப் பட்டியலில் உள்ள 2,097 பேரில் 1,681 பேரும்; 197 கட் ஆப் பட்டியலில் உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் மருத்துவப் படிப்பு இடம் பெற தகுதியுடன் உள்ளனர்.

இவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் இன்ஜி., படிப்புக்கு வர மாட்டார்கள். எனவே இன்ஜி., கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்தினால் மருத்துவம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்ஜி., இடங்கள் காலியாகி, அதை மீண்டும் நிரப்ப முடியாத சிக்கல் ஏற்படும்.எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பின்பே இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும்.தற்போது நீட் தேர்வால், இன்ஜி., கவுன்சிலிங் தள்ளிப்போகும் என்பதால் ஜூலை 31க்கு பிறகும் கவுன்சிலிங் நடத்த, சட்டரீதியாக அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 67 படிப்புகள், கல்லுாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 527 கல்லுாரிகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து 844 இடங்களுக்கு, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இடங்களின் எண்ணிக்கை, இறுதி நேரத்தில் மாறும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.