Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 6, 2017

பள்ளியில் குழந்தையைச் சேர்க்க ஜாதி பெயர் அவசியமா..? கல்வித் துறை விளக்கம்!

'சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கற்றுத்தரும் பள்ளிகளே, புதிதாக சேரும் மாணவர்களிடம் என்ன ஜாதி எனக் கேட்கிறது' என்று சிலர் சொல்வதுண்டு. சாதி ரீதியாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் வாரிசுகளுக்கான
உரிமைகளை அளிக்கவே அவ்வாறு கேட்கப்படுகிறது என்று அதற்கான மறுமொழி கூறுவர். இந்த விவாதத்தைக் கடந்து சாதி, மதம் அடையாளத்திலிருந்து வெளியேற நினைப்பவர்கள் தங்கள் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல் ஒன்று இருக்கிறது.

ஜூன் மாதம் பெற்றோர்களுக்கு பரப்பான மாதம். பிள்ளையைச் சேர்க்க சரியான பள்ளியைத் தேர்வு செய்வதில் தொடங்கி அட்மிஷன் கிடைத்து, பணம் கட்டி முடிப்பதற்குள் பெரும் போரை நிகழ்த்தியதைப் போல உணர்வார்கள். பள்ளியின் அட்மிஷன் படிவத்தில் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவையோடு சாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியும் கேட்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில்தான் சாதி, மத அடையாளத்திலிருந்து விலக முயல்வோருக்கு அந்தச் சிக்கல் வருகிறது.

பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க சென்றார் ஒருவர். அப்போது அட்மிஷன் படிவத்தில் சாதி, மதம் ஆகிய பகுதிகளில் சின்ன கோடு மட்டுமே போட்டிருந்தார். உடனே, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். அந்த இடத்தில் பெரும் விவாதமாகி விட்டது. இதுபோல பல பள்ளிகளிலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு காரணம் என்ன? பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது,
"பெரும்பாலான தலைமை ஆசிரியர்களுக்கு சாதி, மதம் ஆகியவற்றின் பெயரைக் குறிப்பிடாமல் அப்ளிகேஷனை ஏற்றுக்கொள்ளலாம் என்பதே தெரியவில்லை. அதற்கான அரசாணைக் குறித்தும் தெரிந்துகொள்வதில்லை. விவரம் தெரிந்த தலைமை ஆசிரியர்களும் பெற்றோரை சாதி, மதப் பெயர்களைக் குறிப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவரின் பேச்சினைக் கேட்டு மனம் மாறும் பெற்றோர்களும் எவ்வளவு சொல்லியும் உறுதியாக இருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்." என்றார்.

பள்ளி
இதுபோன்ற நிலையில் அரசு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சமீபத்தில் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில்,
"மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவர் விருப்பப்பட்டால் அந்த மாணவரின் பள்ளிச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்மந்தப்பட்டவரின் விருப்பக் கடித்தத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்"
என்று தொடக்கக்கல்வி அலுவலர் சார்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சாதி, மதப் பெயர்கள் இல்லாமல் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

"இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி நிதி உதவி உள்ளிட்ட உரிமைகள் இதன் மூலம் பறிபோய்விடுமே?" என கும்பகோணத்தைச் சேர்ந்த மாரியப்பனிடம் கேட்டோம். இவரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி, மதம் எனக் கேட்கும் பகுதியில் 'இல்லை' எனப் பதிந்திருப்பவர்.


"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், சாதி, மதப் பேதமற்ற ஒரு சமூகத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டிமெனில் யாரேனும் இதனை முன்னெடுக்க வேண்டும் அல்லவா. எங்கள் பிள்ளைகளிடம் விரிவாக இதுகுறித்து பேசிவிட்டே இந்த முடிவுக்கு வந்தேன். பொதுப்பட்டியலில்தான் நீங்கள் போட்டியிட வேண்டியிருக்கும் எனச் சொல்லியும் என் மகனும் மகளும் முழு மனத்தோடு சம்மதித்தனர். இப்போது என் மகன் பொறியியல் முடித்து நல்ல வேலையில் இருக்கிறார். மகள் கல்லூரியில் படித்துகொண்டிருக்கிறார். சில இழப்புகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் சமூகத்திற்கான ஒரு முன்னெடுப்பாக இதைச் செய்தாக வேண்டும் என நான் நினைத்தேன்" என்றார் மாரியப்பன்.

No comments:

Post a Comment