4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!

4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!



தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது தங்களுக்கு போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது தங்களுக்கு போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதனால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.

இது போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

குறைந்தபட்சம் 6 சதவீதம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமும், ஜூலை மாதம் முதல் 7 சதவீதமும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்சம் 6% அளவுக்காவது அகவிலைப்படி உயர்வு வழங்குவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால், அரசு எந்த அடிப்படையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கியிருக்கிறது என்பது தெரியவில்லை.

இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

மத்திய அரசின் நடைமுறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி அவர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் இணைக்கப்பட்டு அதில் 274% புதிய அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பழைய அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்ட அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டு, புதிய அடிப்படை ஊதியத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 சதவீதமும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

7-ஆவது ஊதியக் குழு எங்கே?

ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகியும், தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.

இதனால் தமிழக அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டிருந்தால், தமிழக அரசின் 'ஏ' பிரிவு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருந்தாலே அவர்களின் மாத ஊதியம் ரூ.2422 உயர்ந்திருக்கும்.

ஆனால், இப்போது 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டும் கூட ரூ.1768 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும்.

இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5.5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ரூ.27,562 இழப்பு
தமிழக அரசில் 'ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.37,600 அடிப்படை ஊதியம், ரூ. 6600 தர ஊதியம், 136% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,10,500 ஊதியம் வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் இவர்களுக்கு ரூ.1,21,108 அடிப்படை ஊதியம், 4% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,38,062 ஊதியம் கிடைத்திருக்கும்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படாததால் மாதம் ரூ.27,562 இழப்பு ஏற்படுகிறது.

15 சதவீத இடைக்கால நிவாரணம்

எனவே, அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில், அகவிலைப்படி உயர்வை 6% ஆக திருத்த வேண்டும்.

அடுத்த 3 மாதங்களில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்;

அத்துடன் அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.