கல்வித் துறை முன்னின்று சமூக மாற்றத்தை உருவாக்க முடியாதா?

அப்படித்தான் ரொம்ப நாள் நான் நம்பி ஏமாந்தேன். சி.டி.குரியன்தான் சொன்னார், ‘கல்வி மாற்றம் சமூக மாற்றத்தை உருவாக்காது. சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்திற்குத் தூண்டுகோலா அமையும்ன்னு. அவர் சொன்னது சரி. எந்த நாட்டில், சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வி மாற்றம் ஏற்பட்டிருக்கு? ‘கற்றவை எல்லாம் மறந்த பின்னால், எது தக்கி
நிற்கிறதோ அதுதான் கல்வின்னார் பி.எஃப்.ஸ்கின்னர். அதாவது, வள்ளுவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும்ன்னு சொன்னாரே அதுதான் கல்வி. நீங்க கணக்கை மறக்கலாம், அறிவியலை மறக்கலாம், படிச்சதன் விளைவா எந்தப் பண்புகள் உங்கள் ரத்தத்தில் ஏறி நிக்குதோ அதுதான் கல்வி. சமூக மாற்றம் நிகழாமல் கல்வி மாற்றம் பற்றி பேசுவது அபத்தம்.
டேக்ஸானமி ஆப் லிசனிங்னு ஒரு புத்தகம். கேட்பதில் எத்தனை விதமான முறைகள் இருக்குங்கிறது சம்பந்தமான புத்தகம் அது. இப்ப நாம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கோம் இல்லையா? நான் பேசுறதை நீங்க கேட்குறதும், நீங்க பேசுறதை நான் கேட்குறதும் ஒரே நிலைல அமையுறது இல்லை. அப்புறம் நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்து அமைதியா கவனிச்சுட்டு இருக்கார்னு வெச்சுக்குங்க. அவருடைய கேட்டலின் நிலை வேற. தவிர, ரெண்டு பேர் பேசிக்கிட்டிருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்து உட்காரும்போது நம் பேச்சின் தொனி மாறும். கோபமாப் பேசினாகூட சத்தத்தை அடக்கிக்குவோம். கவனிச்சுருக்கீங்களா? இப்படிப் பேசுதல், கேட்டலில் மொத்தம் 161 வகை இருக்குன்னு அந்த நூல்ல சொல்லியிருக்காங்க. அதாவது, ஒரு பொது இடத்தில் காது கேட்பது வேறு திறன், இருவர் பேசும்போது காது கேட்பது வேறு திறன், மைக்ரோ போனில் காது கேட்பது வேறு திறன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறன்கிறாங்க. அப்போ அம்பது பிள்ளைகள் காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய ஒரு ஆசிரியர் தன்னை எவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு? நூத்தி இருபது கோடிப் பேர் காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய அரசாங்கம் எவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு?
_.சீ.ராஜகோபாலன்.

கல்வியாளர்.