தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்
சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் பெருந்திரள்
முறையீடு ஆர்ப்பாட்டம் வியானன்று (ஜூலை 21)நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட தலைவர்
என்.ராமசாமி தலைமை தாங்கினார். சேப்பாக்கம் பகுதி செயலாளர் கி.ரகுராமன்
வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி
பேசியதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை பத்து
நாட்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர்
சங்கம் சார்பில் நடத்திய போரட்டாத்தின் விளைவாக தமிழக முதலமைச்சர் பிப்ரவரி
மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்புகளை
வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து சில அரசானைகளும் வெளியிடப்பட்டன. ஆனால்
இன்று வரை அந்த கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன.புதிய ஓய்வூதிய
திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய
ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அரசு ஊழியர் ஆசிரியர் தொடர்பான நிர்வாக
நீதியான வழக்குகளுக்கு என்று தனியாக தீர்ப்பாயம் அமைக்கவும், மத்திய அரசு
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு படிகள் அனைத்தையும் வழங்கவும், ஊதிய
முரண்பாடுகளற்ற ஊதிய மாற்றம் வழங்கவும் அதற்கான ஊதியக் குழுவினை அமைக்க
வேண்டும். அரசு ஊழியர் ஆசியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக்
காப்பீட்டு திட்டதிற்கென்று அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க
வேண்டும்.
இவற்றிர்கான ஆணைகளை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே
பிறப்பிக்க வேண்டும்.அதேபோல் ஆளுநர் உரையில் அரசு ஊழியர்களுக்கு செலவு
செய்யப்படும் தொகையை சதவிகிதத்தில் தவறாக அறிவித்துள்ளார். அரசுக்கு வரும்
வருமானத்தில் உண்மையிலேயே அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு எவ்வளவு தொகை
செலவிடப்படுகிறது என்ற சதவிகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர்
பி.எஸ்.அப்பர், மாவட்ட செயலாளர் ச.டானியல் ஜெயசிங் ஆகியோர் பேசினர்.இதில்
மாநில துணைத் தலைவர் கே.என்.தியாகராஜன், மாவட்ட பொருளாளர் எம்.வெங்கடேசன்,
வடசென்னை மாவட்ட தலைவர் தி.கலைசெல்வி, பகுதி செயலாளர் ம.தேவேந்திரன்
உள்ளிட்ட 300கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய
மனுவினை சங்க மாநில நிர்வாகிகள் வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்யமிஸ்ராவிடம்
வழங்கினர்.