கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் வழிகாட்டி நிகழ்ச்சியில் ரமேஷ் பிரபா விளக்கம்

''இன்ஜி., மற்றும் மருத்துவப் படிப்பு மட்டுமே உயர் கல்வியல்ல. நுாற்றுக்கணக்கான பட்டப் படிப்புகள், வேலைவாய்ப்புகளுடன் நிறைந்திருக்கின்றன,'' என, கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.
'தினமலர்' நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:

பிளஸ் 2 முடித்து விட்டு, எப்போது, 'ரிசல்ட்' வரும் என, படபடப்புடன் மாணவர்கள் காத்திருக்கின்றனர். மருத்துவம் கிடைக்குமா; இன்ஜி., படிப்பில் கவுன்சிலிங்கில் சேர முடியுமா என, பெற்றோரும் கவலையுடன் உள்ளனர். இனி, இந்த கவலையை விட்டு விடுங்கள். வெறும், இன்ஜி., மருத்துவம் மட்டுமே உயர்கல்வி அல்ல.
சித்த மருத்துவம்
அதை தாண்டி ஏராளமான படிப்புகள், பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்புகளுடன் நிறைந்திருக்கின்றன.
அவற்றில் எந்த படிப்பிலும் நீங்கள் சேரலாம். மருத்துவத்தில், எம்.பி.பி.எஸ்., தாண்டி, அதற்கு ஈடாக சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகியவை உள்ளன. பல் மருத்துவக் கல்லுாரிகள் அதிகமாக உள்ளன.
மன நல மருத்துவம், கண் பார்வை குறித்த மருத்துவம், நர்சிங் படிப்புகளும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக வேலைவாய்ப்புகளை கொண்டதாக உள்ளன.
வேளாண் படிப்புகளில், பூ, காய் மற்றும் பழங்களை பற்றியும், தோட்டக்கலை குறித்தும் பல படிப்புகள் உள்ளன.
மீன் வள பல்கலையில், மீன் வளம் குறித்த படிப்பு
களுக்கு, மீனவ குடும்பத்தினருக்கு தனி இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
சட்டப் படிப்புக்கு, முன்பை விட அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு, பிளஸ் 2வில் எந்த பாடப் பிரிவிலும் தேர்ச்சி பெற்றிருக்கலாம். 'பைன் ஆர்ட்ஸ்' எனப்படும், கலை, சிற்ப படிப்புகளுக்கும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. 'செராமிக் டிசைனிங்' படிப்பு மூலம், கட்டடங்களுக்கு, 'மார்பிள்' தள டிசைன் பணிகள் கிடைக்கும். 'டெக்ஸ்டைல் டிசைன்' படிப்பில், பெரிய, 'கார்மென்ட்' நிறுவனங்களில் வடிவமைப்பு தொழில்நுட்ப பணியில் சேரலாம்.

நுழைவுத் தேர்வு
'அனிமேஷன்' மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப படிப்புகளின் மூலம், தொலைக்காட்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப பணிகளில் வாய்ப்புகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் படிப்புகளில், பி.ஏ., ஆங்கிலம் படித்தவர்களை, வெளிநாட்டு, 'கார்ப்பரேட்' நிறுவனங்கள், 'கேம்பஸ் இன்டர்வியூ' மூலம் வேலைக்கு சேர்க்கின்றன.கடலியல் படிப்புகளுக்கு, அடுத்த மாதம் நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. இப்படி உயர்கல்வி படிப்புகளுக்கு பஞ்சமில்லை. எனவே, குறிப்பிட்ட ஒன்றைத்தான் படிப்பேன் என்றில்லாமல், குழப்பத்தை நீக்கி, தெளிவான முடிவை எடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.